Showing posts with label Words. Show all posts
Showing posts with label Words. Show all posts

Friday, May 2, 2014

ஹெல்த் பழமொழியும் அதன் பொருளும்


1. அகப்பை குறைத்தால் கொழுப்பை அடக்கலாம்.

அகப்பையான இரைப்பைக்குச் செல்லும் உணவை அளவு மற்றும் திறனறிந்து குறைத்தால் மட்டுமே கொழுப்பை அடக்கலாம்.

2. உப்பு அறியாதவன் துப்பு கெட்டவன்

உணவில் அளவோடு உப்பு சேர்த்தால் பசியைச் சீராக்கும். ஜீரணிக்கும். அதிகப்பட்டால் உமிழ்நீரை அதிகரித்து குமட்ட வைக்கும்.

3. இன்று விருந்து நாளை உபவாசம்

இப்படி இருந்தால் வயிற்று உப்புசம், செரியாமை, அதைத்தொடரும் வயிற்றுப்புண் நோய்களைத் தவிர்க்க முடியும். உபவாசம் என்றால் பட்டினியிருத்தல் மட்டுமல்ல. தேவைப்படின் பழஆகாரம் சாப்பிடுவதும்தான்.

4. கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு

கடுக்காயைப் பயன்படுத்தும்போது உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட வேண்டும். இஞ்சி, சுக்கு உபயோகிக்கும் போது அதன் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

5. எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்க்கும் எட்டே கடுக்காய்.

மலச்சிக்கலுக்கும் அண்மையில் பிரசவித்த தாய்க்கும் உள் மூலத்துக்கும் கடுக்காய் ஒரு சிறந்த மருந்து, மலத்தை இளக்க கடுக்காய்ப் பிஞ்சை பயன்படுத்தவேண்டும்.

6. எருதுக்குப் பிண்ணாக்கு, ஏழைக்கு கரிசாலை.

எருதுக்கு உணவாக அமையும் பிண்ணாக்கு போல, ஏழைக்கு எளிதில் கிடைக்கும் உணவு கரிசாலைக் கீரை. குறைந்த விலையில் நல்வாழ்வு தரக்கூடியது. 

7. பொன்னை எறிந்தாலும் பொடிக்கீரையை எறியாதே.

பொன்னால் அழகு சேர்க்க முடியும். பொடிக் கீரைதான் ஆரோக்கியம். அதிலும் பொன்னாங்கன்னிக்கீரை தங்கச் சத்து உடையது.

8. வாழை வாழ வைக்கும்: 

வாழைப்பழம் உடலைத் தேற்றும் வாழைக்காய் மந்தம் என்றாலும் அளவறிந்து சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டம் தரும். சிறுநீரகக் கல்லை வாழைப்பூ நீக்கும். சிறுநீரை வாழைத்தண்டு பெருக்கும்.

9. வெங்காயம் உண்போருக்கு தங்காயம் பழுதில்லை: 

உடல் இயந்திரத்துக்கு வரும் முக்கிய நோயான உயர் ரத்த அழுத்தத்தை வெங்காயம் கட்டுப்படுத்தும்.

10. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி நிவாரணியாக செயல்படும்.

11. உடம்பை முறித்துக் கடம்பில் போடு

உடல் வலியைப் போக்கி ஓய்வையும் உறக்கத்தையும் இயல்பிலேயே வரவழைக்கும் தன்மை கடம்பு மரத்திற்குத்தான் உண்டு.

12. அறுகம்புல்லும் ஆபத்துக்குதவும்:

திடீர் வண்டுக்கடி, ஒவ்வாமை என்ன கடித்ததென்றே தெரியாமை இவற்றிற்கு அறுகம்புல் ஒரு நச்சு நீக்கி, இது விஷத்தை முறிக்கும் தன்மையுடையது. 

13. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு:

பெண்கள் அளவுக்கதிகமாக சாப்பிட்டால் அவர்களின் இடைப்பகுதி பெருத்து அழகுகெட்டுவிடும்.

14. ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்ரை. 

கரும்பில் இருந்துதான் சர்க்கரை என்றல்ல இலுப்பைப் பூவையும் சர்க்கரையாக பயன்படுத்து வோர் உண்டு.

நன்றி குமுதம் 

Tuesday, June 16, 2009

அம்மா எனக்கொரு போதிமரம்!

மாதங்கள் பத்து மகிழ்வுடனே காத்திருந்து
பாரமென்று பார்க்காமல் பக்குவமாய் எனைத்தாங்கி
நான் கொடுத்த வலியினையும் நன்மையெனப் பொறுத்துக்கொண்டு
ஈன்றெடுத்த என்னம்மா பொறுமையிலே போதிமரம்

பரீட்சைக்கு நான் படிக்க பக்கத்தில் விழித்திருந்து
கண்ணயர்ந்த போதிலெல்லாம் கனிவுடனே காப்பிதந்து
பாசான செய்திகேட்டு என்னைவிட மகிழ்ச்சிகொண்ட
என்னம்மா எனக்கு பாசத்திலே போதிமரம்

தப்பு செய்தால் உடனே தட்டிக் கேட்டுவிட்டு
கண்கலங்கி நான் நிற்க, தானும் சேர்ந்தழுதுவிட்டு
வாரி எடுத்தென்னை வாயாலே திருத்திவிட்ட
வாஞ்ஞையிலே என்னம்மா எனக்கு ஒரு போதிமரம்

மைல்கள் பல கடந்து, தினம்தினம் தொலைபேசி
சின்னக் கவலை மறைத்துச் சிரிப்போடு தினம்பேசி
அங்கிருந்தே எனக்கு அறிவுரைகள் கூறிவிடும்
அறிவினிலே எனக்கு அவர் ஒரு போதிமரம்

அன்னையர் தினத்திற்காய் வாழ்த்தொன்று நான்கூற
‘அடப்போடா’ என்று அப்படியே வெட்கப்பட்டு
சின்னச் சிரிப்பொன்றை எனக்காய்க் கொடுத்துவிட்ட
சிலிர்ப்பினிலே என்னம்மா எனக்கு ஒரு போதிமரம்

Monday, December 29, 2008

பொன்னான மொழிகள்

விரும்பியது கிடைக்கவில்லை என்பதற்காக, கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பாதே.

உள்ளம் என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடலாம், அதில் கீறல்கள் ஏற்படின் திரும்ப இணைக்கவே முடியாது.

நித்திரை கொள்பவனை எழுப்பலாம் - ஆனால் நித்திரைபோல் பாசாங்கு செய்பவனை எழுப்பவே முடியாது.

குறையப் பேசு, நிறையக் கேள்.

மனதில் பகைமையை அடக்கி வைத்தல் நேரடிப் போரைவிடக் கொடியது.

எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை.

தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு.

பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழைதான்.

இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாதாட பலருக்கு தெரியும்; உரையாட சிலருக்குத்தான் தெரியும்.

அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.


தோல்வியை - கழியுங்கள்
முயற்சியை - கூட்டுங்கள்
வெற்றியை - பெருக்குங்கள்
பலனை - வகுத்துவிடுங்கள்
புரிந்ததை- விரிவுபடுத்துங்கள்
புரியாததை- சுருக்குங்கள்
சரித்திரங்களை- சூத்திரங்களாக்குங்கள்
உங்களை நீங்களே- மதிப்பிடுங்கள்

காலண்டரில் கண்ட முத்துக்கள்

திங்கள்: நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு

செவ்வாய்: உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர இயலாது.

புதன்: நல்லுரைகளும், நல்ல தோழர்களும் அறத்திற்கு உறுதுணை.

வியாழன்: கட்டாயப் படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.

வெள்ளி: விலை கொடுக்காமல் பெற இயலாத ஒரு பொருள் அனுபவம்.

சனி: அன்பளிப்பு தரும் பொருளை விட அதனை அளிக்கும் முறைதான் மதிப்பு மிக்கது.

ஞாயிறு: பணக்காரன் ஆவதற்கு மிக அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டு சேமித்தாலே போதும்.

பழைய பொன்மொழிகள்

கையிலே சுத்தியல் தான் இருந்தால் பார்ப்பதெல்லாம் ஆணிபோலத்தான் இருக்கும்.

***

யாருடைய சொல்லும் செயலும் பிறரை துன்புறுத்தவில்லையோ அவனே மனிதன்.

***

மதுக்கடையில் - மறப்பதற்காக குடிப்பவர்கள், குடிப்பதற்கு முன்பே பணம் கொடுத்துவிடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

***

ஒவ்வொரு மாபெரும் மனிதனுக்குப் பின்னாலும், ஒரு பெண் ஆச்சரியத்துடன்.

***

மனைவி என்பவள் உனக்கு வரும் கஷ்டங்களைத் தாங்க உன்னுடன் துணையாக இருப்பவள்.

***

குடிப்பதில் உள்ள தீமைகளைப் பற்றிப் படித்ததும், நான் விட்டுவிட்டேன்.. படிப்பதை.

***

சிரித்தால் உலகம் கூட சிரிக்கும். குரட்டைவிட்டால் தனியாகத்தான் தூங்க வேண்டும்.

***

தேவையான வயது வரும்முன்னர் உங்கள் குழந்தைகளை வண்டியோட்ட அனுமதிக்காதீர்கள். இல்லையென்றால் அவர்களால் எப்போதுமே வண்டி ஓட்ட முடியாது.

***

பியூட்டி பார்லர் முன்பு இருந்த வாசகம். 'இங்கிருந்து வெளியே செல்லும் அழகிகளைப் பார்த்து விசிலடிக்க வேண்டாம். அவள் ஒருவேளை உன் பாட்டியாக இருக்கலாம் '

***

Friday, December 26, 2008

துளிகள்

1) சோம்பித் துருப்பிடித்துப் போவதை விட உழைத்து தேய்ந்து போவது மேல்.

2) மனிதன் உழைக்கப் பிறந்துள்ளான், பறவை பறக்கப் பிறந்துள்ளது.

3) நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பது - நாம் முயற்சி செய்கிற வரையில் நமக்கேத் தெரியாது.

4) ஆர்வம், கொழுந்து விட்டு எரியும் ஆசை, நாட்டம் பெற்றிடுக.

5) ஒரே சமயத்தில் இரு முயல்களை பிடிக்க முயன்றால் இரண்டுமே தப்பியோடிவிடும், எனவே ஒரு துறையில் மட்டுமே முழு மூச்சுடன் கவனம் செலுத்தி முழுமைத்திறன் பெற்றிடுக.

6) எதிலும் வெற்றியைப் பெறத் தொடர் முயற்சி தேவை.

7) காலமும், கடலலையும் எதற்காகவும் காத்திராது. சாதிக்கப் பிறந்த நீ முயற்சியைத் தொடர்வாயாக.

8)சாதனைக் குறிக்கோளுக்கு வானமே எல்லை

9) முட்டுக்களைகளை முறித்தெறி

10) என்னால் முடியும் என உறுதி கொள், எண்ணங்களே செயலுக்கு அடிப்படை.

Thursday, September 25, 2008

ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....

எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.

அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?

அறிவியல் அற்புதமானது தான். ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.

ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.

கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.

கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.

A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Z
அதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.

ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.

மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.

ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை. முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.

தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள் தாம்.

காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.

உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.

சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான். ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.

கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.

நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.

சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும். ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.

உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.

கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.

வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.

உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும். அதுவே வழிகாட்ட சிறந்த வழி.

நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.

நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.

எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.

-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)