Thursday, September 25, 2008

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு

தினமும் எட்டு மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கண்களைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகி வருகிறது. கண் நிபுணர்கள், கீழ் கண்ட பிரச்னைகளுடன் கம்ப்யூட்டரில் பணி புரிபவர்கள் சிகிச்சை கோரி வருவதாகத் தெரிவித்துள்ளனர். கண் எரிச்சல், நமைச்சல், உலர்ந்து போதல், சிவப்பாதல், அழுத்தம் ஆகியவற்றுடன் கழுத்து வலி. இந்தப் பிரச்னைகளை "கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்று வகைப் படுத்துகிறார்கள். இந்த சின்ட்ரோம் மூன்று வகையாகப் பிரிக்கத் தக்கது.1. மெல்லியது 2. இடைநிலைப்பட்டது 3. கொடியது இதனால் உடனடியாக பார்வை பறிபோய்விடாது என்பதால், இந்த விஷயத்தில் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. சாப்ட்வேர் கம்பெனிகள் கம்ப்யூட்டர் திரையில் பிரதிபலிப்பு ஏற்படாமல் இருக்கு கம்ப்யூட்டரில் இருந்து வெளிப்படும் வெளிச்ச அளவையும் அந்த அறையின் வெளிச்சத்தையும் தரப்படுத்தி வைத்துக் கொள்கின்றனர். கம்ப்யூட்டரில் பணி புரிபவர்கள் இது போன்ற கட்டுக்குள் இருக்கும் ஒளி அளவுடன் பணி செய்ய வேண்டும். கரு விழிக்கு போதுமான ரத்தம் பாயாததால் தான் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. கண்களை மூடித் திறப்பதால் கரு விழிக்கு போதுமான ரத்தம் கிடைக்கிறது. அதனால் தேவையான ஆக்சிஜனையும் இது பெற்றுக் கொள்கிறது. ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறையாவது விழிகளை மூடித் திறக்க வேண்டும். கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது இது குறைவதால் பிரச்னை ஏற்படுகிறது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வெடுத்துக் கொண்டு 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கண் உலர்வதை தடுத்து நிறுத்த முடியும். கம்ப்யூட்டர் திரை குறைந்தது 50 செ.மீ. தொலைவில் இருக்க வேண்டும். நம் விழிகளின் உயரத்துக்கு குறைவான உயரத்தில் திரை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை சொல்கின்றனர்.

No comments: